ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

 

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு இழப்பீடு கோரியும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், இதற்கு முன்னர் பறிமுதல் செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஆகஸ்ட் 30ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என்றும், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மீன்வளத்துறை அமைச்சர் ஆகஸ்ட் 30 அன்று மீனவர் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்துப் பேச அனுமதி அளித்துள்ளதாகவும், அக்கூட்டத்தில் சுமுகமான முடிவு எட்டப்பட்டால் வேலைநிறுத்தம் கைவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.