பெரும் பரபரப்பு...  ராமேஸ்வரம்  கோவிலில்  அமைச்சர்   ஆய்வு செய்த போதே பக்தர்களுக்குள்  அடிதடி!  

 

 

  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பொது மக்கள் வரிசையில் நின்று சாமி கும்பிடுவதில் இரு வேறு குடும்பங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு இடையே திடீரென வாய்வார்த்தை முற்றியது. இந்த சாதாரண வாக்குவாதம்   கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர் மதன்ராஜா இந்த புனிதக் கோவிலில் பல்வேறு நிர்வாகப் பணிகள் குறித்து முக்கிய ஆய்வு நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இந்த வன்முறை அரங்கேறியது. சாமி சன்னதிக்கு மிக அருகிலேயே இரு தரப்பு பக்தர்களும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட விசித்திரமான சம்பவம் அங்கிருந்த ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் கோவில் வளாகத்திற்குள் திடீரெனக் கடுமையான கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

அமைச்சரின் வருகைக்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரிகள் மற்றும் போலிசார், இந்த மோதலைக் கண்டு உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு தரப்பினரையும் போலிசார் மிகுந்த சிரமத்திற்கு இடையே தடுத்து நிறுத்தி, அவர்களை அங்கிருந்து தனித்தனியாக விலக்கி வைத்தனர்.