நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா? சர்ச்சைக்கு பளிச் பதில்!
நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் தெலுங்கு திரைப்பட இயக்குநருமான கிருஷ்ணா வம்சியும் விவாகரத்து செய்யப்போவதாக அண்மைக்காலமாக தகவல்கள் பரவி வந்தன. இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருவதால் இந்த வதந்திகள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார்.
'ரா டாக்ஸ் வித் வி.கே.' (Raw Talks with VK) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், தாங்கள் இன்னும் திருமண உறவில்தான் இருப்பதாகவும், தங்களது தொழில் காரணமாக வசதிக்கேற்ப வெவ்வேறு நகரங்களில் மகிழ்ச்சியாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்பு தனது குடும்பம் ஹைதராபாத்தில் இருந்தபோது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளார். அப்போது தனது மகன் ரித்விக், தான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கணவருடன் ஆலோசித்து மகனை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்த்ததாகக் கூறியுள்ளார்.
தற்போது சென்னையில் தான் வசிப்பதாகவும், கணவர் கிருஷ்ணா வம்சி ஹைதராபாத்தில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனித்தனியாக வசிப்பதால் சண்டைகள் குறைந்து இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
திருமணம் என்பது உறவில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறை என்று குறிப்பிட்ட அவர், திருமணத்திற்கு முன்பே கிருஷ்ணா வம்சி தன்னுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்று கூறியதாகவும், அப்போது அதற்கு சம்மதித்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுவதாகவும் சிரித்தபடி தெரிவித்துள்ளார்.