இந்தியாவின் மிகச் செல்வம் மிகுந்த மாவட்டமாக உருவெடுத்தது ரங்கா ரெட்டி!

 

இந்தியாவின் பொருளாதார வரைபடத்தில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. நாட்டின் பாரம்பரிய நிதித் தலைநகரான மும்பை மற்றும் தொழில்துறை நகரமான குருகிராமைப் பின்னடைத்து, தெலங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் இந்தியாவின் அதிகத் தனிநபர் ஜிடிபி கொண்ட மிகச் செல்வம் மிகுந்த மாவட்டமாக முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

‘InfraMantra’ அமைப்பு வெளியிட்டுள்ள பொருளாதாரத் தரவுகளின்படி, இந்தியாவின் முக்கியச் செல்வந்த மாவட்டங்களின் வரிசையில் ரங்கா ரெட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி  ரூ. 11.46 லட்சம் ஆக உயர்ந்து, நாட்டின் சராசரியை விட பல மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது.

நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்த குருகிராம் (ரூ. 9.05 லட்சம்), பெங்களூரு நகர்ப்புறம் (ரூ. 8.93 லட்சம்) மற்றும் மும்பை (ரூ. 6.57 லட்சம்) போன்ற பெரும் பொருளாதார மையங்களைப் பின்னுக்குத் தள்ளி ரங்கா ரெட்டி இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஹைதராபாத்தின் பிரதானத் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில் பூங்காக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதே ரங்கா ரெட்டி மாவட்டத்தின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்:

ஐடி மற்றும் ஃபார்மா மண்டலங்கள்: ஹைடெக் சிட்டி, கச்சிபௌலி போன்ற சர்வதேசத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்கள், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மருந்து உற்பத்தித் துறை அனைத்தும் இம்மாட்டத்தில் அமைந்திருப்பது.

 உயர் தொழில்நுட்பத் துறைகள், பயோடெக்னாலஜி மற்றும் ரியல் எஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அதிக ஊதியம் பெறும் தொழில்முறை வல்லுநர்கள் அதிகளவில் இங்கு குவிந்துள்ளனர். உலகத்தரம் வாய்ந்த வெளிவட்டச் சாலை, சர்வதேச விமான நிலைய இணைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகள் இம்மாட்டத்தின் பிராந்தியப் பொருளாதார மதிப்பை உலகளவில் உயர்த்தியுள்ளன.