பரபரப்பு: குவாட்டருக்கு கூடுதலாக 5 ரூபாய் கேட்ட டாஸ்மாக் ஊழியர் - பேடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற இளைஞர்!
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில், குவாட்டர் மது பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், கடையிலிருந்த பேடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது வாங்கச் சென்ற இளைஞர் ஒருவர் விற்பனையாளரிடம் குவாட்டர் பாட்டில் கேட்டுள்ளார். அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக 5 ரூபாய் வழங்குமாறு கடை ஊழியர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த அந்த இளைஞர், கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கடையில் பணப் பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த பேடிஎம் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், பணப் பரிவர்த்தனை இயந்திரத்தையே இளைஞர் தூக்கிச் சென்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.