விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!  

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் சமூக வலைதளத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தவெகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார், அதன் பிறகு சமூக வலைதளங்களில் தன்னைத் தவெகவினர் மிக மோசமாகச் சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக விர்சுவல் வாரியர்ஸ் என்ற பெயரில் செயல்படுபவர்கள், தன்னை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசி வருவதாக ரஞ்சனா நாச்சியார் புகார் தெரிவித்துள்ளார். தனது கட்சித் தொண்டர்கள் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டிக்கத் தவறிய விஜய், இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தவெகவில் இருந்து வெளியேறும் பெண்களை இணையதளத்தில் ஆபாசமாகச் சித்தரிக்கும் கலாச்சாரம் அங்கிருப்பதாக அவர் சாடியுள்ளார். புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

"எரிபொருள் விலை உயர்வு மற்றும் லாக்டவுனை விட தவெக மிகப்பெரிய ஆபத்தானது. விஜய் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பெண்கள் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதால், நேற்று விஜய் கொடுத்த புகார் ஒரு திட்டமிட்ட நாடகம்."

தேர்தல் நெருங்கும் வேளையில், தவெகவில் இருந்து வெளியேறிய ஒரு பெண் நிர்வாகி, அக்கட்சியின் தலைவர் மீதே காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குத் தவெக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.