போதைப்பொருள் கொடுத்து பலாத்காரம்... 20 வயது இளம்பெண்ணை மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தல்... பேருந்து ஊழியர்கள் அட்டூழியம்!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தாமரசேரியில், 20 வயது இளம்பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிரட்டித் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் பஸ் ஊழியர்களான அனீஷ் மற்றும் சஜித் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தாமரசேரி பகுதியில் 20 வயது இளம்பெண்ணிற்குப் போதைப்பொருள் கொடுத்து வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனை வீடியோவாகப் பதிவு செய்து வைத்துக்கொண்டு, ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பஸ் ஊழியர்களான அனீஷ் மற்றும் சஜித் ஆகியோரை இன்று கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாகத் தாமரசேரி டி.எஸ்.பி. தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த குற்றச் செயலில் மேலும் பலருக்குத் தொடர்பிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் மற்றவர்களைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.