முதல்வர் விஜய் ரூட்டில் ராஷ்மிகா ஜோடி... தெலங்கானாவில் பொதுத்தேர்வில் சாதித்த 180 மாணவர்களை நேரில் அழைத்து பரிசு வழங்கி கௌரவம்!

 

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும், தங்களது பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளையும் தாண்டி தற்போது ஒரு உன்னதமான சமூக சேவை காரியத்தில் கைகோர்த்து இறங்கியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியாகி இருந்த 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில், வறுமை மற்றும் கிராமப்புறச் சூழலிலும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்களைத் தேடிச் சென்று கௌரவிக்க இந்த நட்சத்திர தம்பதியினர் முடிவு செய்தனர். இதற்காகத் தங்களது சொகுசுப் பயணங்களை விடுத்து, தெலங்கானா மாநிலத்தின் மிக பின்தங்கிய எல்லையோரக் கிராமமான தும்மன்பேட் பகுதிக்கு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இன்று நேரடியாக விசிட் அடித்தனர்.

அங்கு நடைபெற்ற கல்விப் பாராட்டு விழாவில், நாகர்குர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சற்றேறக்குறைய 180 ஏழை எளிய மாணவ, மாணவிகளை மேடைக்கு அழைத்து அவர்களின் சாதனையைப் பாராட்டி, தங்களது சொந்தப் பணத்தில் இருந்து விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினர்.

நட்சத்திர நாயகன் விஜய் தேவரகொண்டா மற்றும் கனவுக்கன்னி ராஷ்மிகாவைத் தங்களது சொந்தக் கிராமத்தில் நேரில் பார்த்ததும், அவர்களிடம் இருந்து பரிசுகளைப் பெற்றுக் கொண்டதும் அந்தப் பகுதி மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

இவ்விழாவில் மேடையில் மைக் பிடித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, "கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களின் உயர்கல்விக் கனவுகளுக்குத் தோள் கொடுக்கவும் எங்களது இந்தச் சிறிய கல்வி ஊக்குவிப்பு முயற்சியானது  தடையின்றி வரும் ஆண்டுகளிலும் தொடரும்" என்று  உறுதியளித்தார்.

வெள்ளித்திரையைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ஏழை மாணவர்களின் கல்விக்காக களமிறங்கியுள்ள விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதியின் இந்த மனிதநேயச் செயல் சமூக வலைதளங்களிலும் பரவி பாராட்டுக்களை அள்ளி வருகிறது.