வீட்டிற்கே சென்று ரேஷன் கைரேகை பதிவு.. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வசதி!
ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் கட்டாயம் பயோமெட்ரிக் தரவுப் புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ரேஷன் கடைக்கு வர இயலாதவர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று பதிவு செய்யும் பணிகளைத் தமிழ்நாடு அரசுத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளுக்கு நேரில் வர முடியாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின் பேரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரேஷன் கடை ஊழியர்கள் கையடக்க பயோமெட்ரிக் கருவிகளுடன் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களின் கைரேகை மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைப் பதிவு செய்து வருகின்றனர். இத்துடன், போலி அட்டைகளைத் தடுக்கும் பொருட்டும், முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டும் குடும்பத்தில் உயிரிழந்த உறுப்பினர்களின் பெயர்களைக் குடும்ப அட்டையில் இருந்து நீக்கும் பணிகளும் இச்சிறப்பு முகாம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசுத் துறையின் இந்த நடவடிக்கையால், நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். பயோமெட்ரிக் பதிவு செய்ய முடியாமல் வீட்டில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவலை, சம்பந்தப்பட்ட பகுதி ரேஷன் கடை ஊழியர்களிடம் குடும்ப அட்டாதாரர்கள் நேரில் தெரிவித்து இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.