வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... நவ.4, 5 தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நேரில் விநியோகம்!
தமிழக அரசின் 'இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்' திட்டத்தின் கீழ், வரும் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அத்தியாவசிய பொது விநியோகப் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத 65 வயதைக் கடந்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பண்டிகைக் காலம் மற்றும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் அரசின் இந்த நடமாடும் ரேஷன் விநியோக நடவடிக்கை அமைந்துள்ளது.