இன்றும் நாளையும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... திமுகவின் ‘தாயுமானவர் திட்டம்’ தொடர்கிறது!

 

தமிழக அரசின் மிக முக்கிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றான 'முதல்வரின் தாயுமானவர் திட்டம்' மூலம், ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் தகுதியான பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று விநியோகிக்கப்பட உள்ளன.

ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க இயலாத நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளாகக் கருதப்பட்டு, அவர்களின் இல்லங்களுக்கே ரேஷன் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

ஜூன் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு, தகுதியான பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அத்தியாவசிய ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகள் இன்றும் (ஜூன் 02), நாளையும் (ஜூன் 03) முழுவீச்சில் நடைபெறவுள்ளன. ரேஷன் கடைப் பணியாளர்கள் மற்றும் இதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்கள் இந்த விநியோகப் பணியில் ஈடுபட உள்ளனர்.

கடும் வெயில் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை எவ்வித சிரமமுமின்றி அவர்கள் தங்களது இல்லங்களிலேயே பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தகுதியிருந்தும் இத்திட்டத்தின் கீழ் இன்னும் இணையாத பயனாளிகள், தங்களது பகுதிக்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகம் அல்லது ரேஷன் கடைகளில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.