இன்று முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்!

 

தமிழகத்தில் தாயுமானவர் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களுக்குத் தீர்வு காணக் கோரி, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைப் பணியாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.தினேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று செப்டம்பர் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை ரேஷன் கடைப் பணியாளர்கள் கருப்பு உடை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

புளூடூத் முறைக்குப் பதிலாக பாயின்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் மூலம் நேரடியாகப் பொருட்களை ஸ்கேன் செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இ.கே.ஒய்.சி முடிக்கப்படாத குடும்ப அட்டைகளைத் தற்காலிகமாக முடக்கி வைத்து, பயோமெட்ரிக் அங்கீகாரம் முடிந்ததும் தானாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மேலும், பெண்கள், கர்ப்பிணிப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பணியாளர்களுக்குச் சிறப்பு விலக்குகள் அளிக்க வேண்டும்.

மூன்று மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை ஒரே தவணையில் விநியோகிக்க அனுமதிக்க வேண்டும்; அரிசி உள்ளிட்ட பொருட்களைப் பொட்டலங்களாக வழங்க வேண்டும்; மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு ஒரே மாதிரியான வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்.

தாயுமானவர் திட்டத்தின் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்; காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, அதுவரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தகுதியற்றவர்களின் பெயர்களைக் குடும்ப அட்டைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது.