பயங்கர விபத்து... ரேஷன் அரிசி லாரி மோதி இருவர் பரிதாபப் பலி !
சென்னை சென்ட்ரல் பேசின் ப்ரிட்ஜ் அருகே நேற்று ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஒன்று, சாலையில் சென்ற இருவர் மீது எதிர்பாராத விதமாக பலமாக உரசியுள்ளது. இதில் நிலைதடுமாறி லாரியின் பின் சக்கரத்தில் விழுந்த அந்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் போது அந்தப் பாதையில் சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண் மீதும் அந்த லாரி பலமாக மோதியுள்ளது. இதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். லாரியில் திடீரென பிரேக் பழுதான காரணத்தினாலேயே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர். பரபரப்பான சென்னை சாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.