அரசு மருத்துவமனையில் பிரசவ வார்ட்டில் எலிகள் ராஜ்ஜியம்.. வாணியம்பாடியில் பதறவைக்கும் அவலம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் ஏராளமான எலிகள் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அண்மையில் 6 மாடிகள் கொண்ட புதிய கட்டடம் திறக்கப்பட்ட போதிலும், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகள் இன்னமும் முகப்பில் உள்ள பழைய கட்டடத்திலேயே செயல்பட்டு வருகின்றன.
பழைய கட்டடத்தின் சுவர்களில் உள்ள துளைகள் மற்றும் பிளவுகள் வழியாகப் பல எலிகள் மகப்பேறு வார்டுக்குள் தடையின்றி உலா வருகின்றன. நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகம் கொண்ட மகப்பேறு பிரிவில், பிறந்த பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் தங்கியிருக்கும் நிலையில், இரவு நேரங்களில் எலிகள் நடமாடுவது நோயாளிகளிடையே பெரும் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத் துறையின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்துள்ள அப்பகுதி மக்கள், பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக மகப்பேறு பிரிவைப் புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது எலிகள் வராதவாறு உரியத் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.