உத்சவ் 2026 விழாவில் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது... !
கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தேவி ரத்னா’ விருது, இந்த ஆண்டு நடிகர் ரவி மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற ‘உத்சவ் 2026’ விழாவில், இந்த கௌரவ விருது அவருக்கு வழங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் தொடரில் அவர் நடித்த அருண்மொழி வர்மன் கதாபாத்திரம் மற்றும் தமிழ் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் விருதைப் பெற்றுக் கொண்ட ரவி மோகன், பல்லாஸனா பழையகாவு பகவதி அம்மன் தேவஸ்தானம் அமைப்பின் ஆன்மிகச் சூழல் மற்றும் பாரம்பரியப் பெருமை குறித்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். விருதுடன் ரூ.1,00,001 ரொக்கப் பரிசு, தங்க நினைவுச் சின்னம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகையும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரவி மோகனின் இணையர் கெனிஷா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது, இது விழாவிற்கு வந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விருது விழாவில் அரசியல் பிரமுகர்கள், கோயில் நிர்வாகிகள் மற்றும் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஏராளமான திரை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். ரவி மோகனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டதால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிறந்த கலைஞரான ரவி மோகனுக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம், அவரது திரைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.