ஆட்ட நாயகன் விருதை குஜராத் கல்வி மந்திரிக்கு சமர்பித்த ரவீந்திர ஜடேஜா!
லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, பொறுப்புடன் விளையாடி 29 பந்துகளில் 43* ரன்கள் (நாட் அவுட்) குவித்து அணியை மீட்டெடுத்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது.
ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ரவீந்திர ஜடேஜா, அதனைத் தனது மனைவியும் குஜராத் கல்வித்துறை அமைச்சருமான ரிவாபா ஜடேஜாவுக்குச் சமர்ப்பித்தார். இது குறித்து அவர் பேசுகையில் "நேற்று என் மனைவியிடம் பேசியபோது, 'நாளைப் போட்டியில் நீங்கள் ஏதோ ஒரு அதிசயம் செய்யப்போகிறீர்கள்' என்று அவர் சொன்னார். அவர் சொன்னது போலவே இன்று ஆட்டம் அமைந்ததால், இந்த விருதை அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், நிக்கோலஸ் பூரனை அவுட் செய்த பிறகு பாக்கெட்டுக்குள் கையை வைத்துக் கொண்டாடியது குறித்துக் கேட்டபோது, "பூரன் இப்போது எனது கட்டுப்பாட்டில் (பாக்கெட்டுக்குள்) இருக்கிறார் என்பதைச் சொல்லவே அப்படிச் செய்தேன்" எனத் தனது பாணியில் பதிலளித்தார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.