நகைகளை ஏலம் விட முடியாது - ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள் விளக்கம்!
வங்கிகள் அல்லது சாரா நிதி நிறுவனங்களில் நகைக்கடன் பெற்றுத் தவணை செலுத்தத் தவறினால், அடகு வைக்கப்பட்ட நகைகளை உடனடியாக ஏலத்தில் விட முடியாது என இந்திய ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதல்களில் தெளிவுபடுத்தியுள்ளது.
கடன் தவணையைச் செலுத்தத் தவறும் வாடிக்கையாளர்களுக்கு, முதலில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நினைவூட்டல்கள் அனுப்பப்பட வேண்டும். குறுஞ்செய்தி நினைவூட்டல்களுக்குப் பிறகும் நிலுவைத் தொகையைச் செலுத்தாதபட்சத்தில், வாடிக்கையாளருக்கு முறையாக எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.
நோட்டீஸிற்குப் பிறகும் வாடிக்கையாளருக்குக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்குத் தேவையான கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் அல்லது வேறு ஏதேனும் மாற்றுத் தீர்வுகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட அனைத்து வாய்ப்புகளும் மற்றும் அவகாசங்களும் முடிவடைந்த பின்னரே, வங்கியால் நகையை ஏலம் விடும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை நகைக்கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைந்துள்ளது.