ரெட் அலர்ட்: அருணாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு, திடீர் வெள்ளம்... 3 பேர் பலி - 7 மாவட்டங்கள் துண்டிப்பு!
அருணாச்சல பிரதேசத்தின் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 'கீயி பன்யோர்' மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 7-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கான சாலைப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, அம்மாநிலம் பெரும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
கீயி பன்யோர் மாவட்டத்தின் யாசாலி வட்டத்தில் உள்ள 'நீப்கோ' (NEEPCO - வடகிழக்கு மின்சாரக் கழகம்) நீர்மின் நிலையத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில்தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் பெய்த 72.8 மி.மீ அதிவேகக் கனமழையால், அங்குப் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாதுகாப்புத் தடுப்புச் சுவர் ஒன்று திடீரென உடைந்து சரிந்தது. இதனால், காட்டாற்று வெள்ளமும் டன் கணக்கிலான சகதியும் குடியிருப்புப் பகுதிக்குள் பாய்ந்து, 18-க்கும் மேற்பட்ட வீடுகளை அடியோடு அடித்துச் சென்றது.
வெள்ளத்தில் மொத்தம் 5 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக முப்படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையின் மூலம் இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. முதல் நாளில் விவேகானந்தா கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை நிர்மலா குப்தா (35) என்பவரின் உடலும், தொடர்ந்து மேகாலயாவைச் சேர்ந்த பல்லாரி மராக் (30) என்ற பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீப்கோ ஊழியரான சௌரவ் குமார் (30) என்பவரது உடல் சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள பக்கத்து மாவட்டப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்னும் இருவரைக் காணவில்லை என்பதால் மீட்புப் பணி 5-ஆவது நாளாகத் நீடிக்கிறது. நிலச்சரிவுகள் காரணமாக அருணாச்சல பிரதேசத்தின் உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை-13 மற்றும் பொடின்-கிமின் முக்கியச் சாலைகளில் ராட்சதப் பாறைகளும் மரங்களும் விழுந்துள்ளதால் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. இதனால் கீயி பன்யோர், கீழ் சுபன்சிரி, குருங் குமே, கிரா தாதி, காம்லே, மேல் சுபன்சிரி மற்றும் லேபாரடா உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் சீன எல்லையோர மாவட்டங்கள் வெளி உலகத் தொடர்பின்றித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ரங்கநதி அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அண்டை மாநிலமான அசாமின் தேமாஜி, லக்கீம்பூர் மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு இரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் இரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு 200 மி.மீ-க்கும் மேல் அதித்தீவிர மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, நாட்டின் பிற பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாகவும், அடுத்த சில நாட்களில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை மேலும் வலுவடைவதற்கேற்ற சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது தற்போதைய அறிக்கையில் எச்சரித்துள்ளது.