தஞ்சை, திருச்சி உட்பட 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிரமான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு இன்றுஅதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இந்த 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூறாவளிக் காற்றுடன் கூடிய 'அதி கனமழை' பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் 'மிக கனமழை' பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 'கனமழை' பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.