ஒடிசாவில் கொட்டி தீர்க்கும் கனமழை... ரெட் அலர்ட் எச்சரிக்கை!
ஒடிசா மாநிலத்தில் நேற்று முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நன்கு வலுப்பெற்றுள்ளதாகவும், இது அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் பலத்த மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 14ம் தேதி வரை வடக்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம், வங்கதேச கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மற்றும் மயூர்பஞ்ச் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவ பெற்றோர்களுக்கு விடுமுறை குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.