வரத்துக் குறைவு, பருவமழை தாக்கம்... தமிழகத்தில் காய்கறி விலை இருமடங்கு உயர்வு!

 

சின்ன வெங்காயம் கிலோ ரூ.260: திருவாரூர் சந்தையில் முன்னர் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது சுமார் நான்கு மடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பிற முக்கியச் சந்தைகளிலும் சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து பொதுமக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனையான வெண்டைக்காய், தற்போது ரூ.60-ஆக உயர்ந்துள்ளது. அன்றாடச் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் வெண்டைக்காயின் விலை ஒரேடியாக இரட்டிப்பாகியிருப்பது குடும்ப பட்ஜெட்டைப் பாதித்துள்ளது.

பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், முருங்கைக்காய் உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது.

வடகிழக்குப் பருவமழை மற்றும் தொடர் மழைச் சூழல்களால் விளைச்சல் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும், சந்தைகளுக்குக் காய்கறிகளின் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், முந்தைய சாகுபடி பருவம் முடிந்து புதிய மகசூல் சந்தைக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதாலும் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

கடந்த காலங்களில் சின்ன வெங்காயத்திற்குப் போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் சாகுபடியைக் குறைத்ததும் தற்போதைய தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. வரத்து மேலும் குறைந்தால் சில காய்கறிகளின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு இடையே, காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்திருப்பது வீட்டுச் செலவுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிறு மற்றும் நடுத்தர உணவகங்களும் மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் சிரமத்தை எதிர்கொண்டு வருவதால், காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.