மேற்கு வங்கத்தில் 50 தொகுதிகளில் மறுதேர்தல்!? - "வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்!" - பவன் கேரா வலியுறுத்தல்!

 

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அங்குள்ள 50 தொகுதிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி மறுதேர்தல் நடத்த வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "SIR முறையின்கீழ், உரிய அறிவிப்பின்றி லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 50 தொகுதிகளில் இவ்வாறு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அந்தத் தொகுதிகளின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது."

வாக்குரிமை என்பது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை. அந்த உரிமை பறிக்கப்பட்ட நிலையில், அங்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் செல்லாது என அவர் வாதிட்டுள்ளார்.

பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை மீண்டும் முழுமையாகச் சேர்த்து, அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட பின்னரே இந்த 50 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகளில், காங்கிரஸின் இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக மாற்றக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க இழுபறி நீடிக்கும் சூழலில், மேற்கு வங்கத்திலும் இந்த மறுதேர்தல் கோரிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.