ஆந்திராவில் மறுதேர்தல்... மாரடைப்பால் உயிரிழந்த ஜனசேனா வேட்பாளர் 350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
ஆந்திர மாநிலத்தில், உயிரிழந்த ஜனசேனா கட்சி பெண் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்ற சம்பவம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவரப்பள்ளி மண்டலத்தில் உள்ள துமந்துனிகுடெம் கிராமத்தைச் சேர்ந்தவர் காரபாட்டி திவ்யா (28). இவர் அங்கு நடைபெற்ற மண்டல பரிஷத் பிராந்தியத் தொகுதி தேர்தலில் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிட்டார். நவம்பர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவுக்குப் பிறகு திவ்யாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வயிற்றுவலி காரணமாக முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜமகேந்திரவரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், கடந்த நவம்பர் 6-ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று வெளியான தேர்தல் முடிவில் திவ்யா தனது போட்டியாளரை 350 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வெற்றிச் செய்தியைக் கேட்டு மகிழ வேண்டிய குடும்பத்தினரும் கட்சியினரும், அவர் உயிருடன் இல்லாததால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.