"ரீல்ஸ் போடுறவங்க தான் தவெக வேட்பாளர்கள்!" - ராஜேந்திர பாலாஜி கிண்டல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், தவெக வேட்பாளர்கள் குறித்து கிண்டலுடன் விமர்சித்து பேசினார்.
சமீபத்தில் தவெகவின் முக்கிய நிர்வாகியான நிர்மல் குமார், "இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்" எனத் தெரிவித்திருந்தார். இது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.
"தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு கட்சியே கிடையாது. தேர்தல் நேரத்தில் வந்துவிட்டுப் போகும் ஒரு அமைப்பு" என அவர் விமர்சித்தார். தவெக வேட்பாளர்களைக் குறித்துக் கிண்டல் செய்த அவர், "அதில் இருக்கும் வேட்பாளர்களைப் பார்த்தோம். எல்லோரும் இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் போட்டு அரசியல் செய்து வருபவர்கள். இவர்கள் எப்படி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அரசியல் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே மக்களைச் சந்திப்பார்கள் என்றும், தவெக வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் செய்வதாகவும், களத்தில் அவர்களைப் பார்க்க முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுக அழியும் என்ற கருத்தை நிராகரித்த அவர், அதிமுக என்பது ஆலமரம் போன்றது, அதன் வேர்கள் ஆழமாகப் பாய்ந்துள்ளன. சிறு சிறு கட்சிகள் கூறுவதால் அதிமுகவின் செல்வாக்கு குறையாது எனத் தெரிவித்தார்.