அரசு பதவியில் இல்லாமல் ஆய்வு நடத்திய தவெக பெண் - சினிமா பாணியில் ரீல்ஸ்!
தேனி மாவட்டத்தில் எந்தவித அரசுப் பதவியோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வப் பொறுப்போ இல்லாமல், அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சினிமா பாணியில் ரீல்ஸ் செய்து அத்துமீறலில் ஈடுபட்ட பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா என்ற பெண், தன்னைத் 'தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட மகளிரணித் தலைமை' என்று சுய விளம்பரம் செய்து கொண்டுள்ளார். இந்த போலிப் பதவியைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் தேனியில் உள்ள சில அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அதிகாரிகள் பாணியில் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளார்.
இதுமட்டுமன்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அத்துமீறிக் காரை ஓட்டிச் சென்றதுடன், அங்குள்ள முக்கிய நாற்காலியில் அமர்ந்து கொண்டு, பின்னணியில் மாஸான சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு 'ரீல்ஸ்' வீடியோக்களாக எடுத்துத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் பரவி, தவெக அரசின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் விவாதங்கள் எழுந்ததை அடுத்து, தவெக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
"தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போதைக்கு 'மாவட்ட மகளிரணித் தலைமை' என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வப் பொறுப்பும் யாருக்கும் வழங்கப்படவில்லை. கட்சியில் அப்படி ஒரு பொறுப்பே கிடையாது. கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, அரசு அலுவலகங்களில் அத்துமீறலில் ஈடுபட்ட அந்தப் பெண் மீது கடுமையான துறை ரீதியான மற்றும் சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எவரும் பொதுமக்களுக்கோ அல்லது அரசு நிர்வாகத்திற்கோ இடையூறாக இருக்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் ஏற்கனவே கறாரான உத்தரவு பிறப்பித்திருந்த சூழலில், இந்தத் தேனி பெண்ணின் போலி 'ஆய்வு' விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.