ஒரே நபரைக் கரம்பிடித்த 3 சகோதரிகள்... வைரல் வீடியோ! 

 

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான வீடியோ படப்பிடிப்பு பணிகளை விகாஸ் என்ற இளைஞர் கடந்த 6 மாதங்களாகக் கேமராமேனாக இருந்து செய்து கொடுத்து வந்துள்ளார். வீடியோக்கள் எடுக்கும் வேளையில் விகாஸ் மற்றும் அந்தச் சகோதரிகள்  இடையே நெருக்கமும் நட்பும் அதிகரித்து நாளடைவில் அது காதலாக உருவெடுத்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் தாங்கள் மூவரும் பிரியாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ வேண்டும் என்பதில் சகோதரிகள் தீவிரமாக இருந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 3 சகோதரிகளும் கலந்தாலோசித்துத் தங்களது கேமராமேனான விகாஸையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அவரிடம் தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். சகோதரிகளின் உணர்வுகளுக்கும் அலாதி பாசத்திற்கும் மதிப்பளித்த விகாஸ், அவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி அருகில் உள்ள கோயிலில் வைத்து உறவினர்கள் யாரும் இன்றி விகாஸ் அந்த 3 சகோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டார். இந்த வினோதத் திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் வெளியாகிப் பெரும் வைரலானதைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகளும் இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அனைவரும் வயது வந்தவர்கள் என்றும், சுய விருப்பத்தின் பேரிலேயே இந்தத் திருமணத்தை செய்துகொண்டதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்ற போதிலும், சட்டரீதியாக இந்தத் திருமணம் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.