காயம்பட்ட விரலில் ‘மை’ வைக்க மறுப்பு! இளம்பெண்ணை வாக்களிக்க அனுமதி மறுத்ததால் திருச்சூரில் பரபரப்பு!

 

கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், திருச்சூர் கூர்க்கஞ்சேரி பகுதியில் ஒரு இளம்பெண் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.

திருச்சூர் கூர்க்கஞ்சேரியைச் சேர்ந்த அக்சயா (26) என்ற இளம்பெண் நேற்று காலை தனது வாக்கைச் செலுத்த வாக்குச்சாவடிக்குச் சென்றார். பொதுவாக வாக்களித்த பின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அக்சயாவின் இடது கை ஆள்காட்டி விரலில் பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டிருந்தது. அங்கு மை வைத்தால் காயம் அதிகமாகும் என்பதால், அதில் மை வைக்க அவர் மறுப்பு தெரிவித்தார். ஆனால், தேர்தல் விதிமுறைகளின்படி ஆள்காட்டி விரலில் தான் மை வைக்க வேண்டும் எனக் கூறி அங்கிருந்த அதிகாரி அக்சயாவை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

தான் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழை அக்சயா காண்பித்தும், வாக்குச்சாவடி அதிகாரி அதனை ஏற்க மறுத்துவிட்டார். இந்தத் தகவல் பரவியதும், அப்பகுதிக்கு வந்த இடதுசாரி முன்னணி வேட்பாளர் சுனில் குமார், அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "ஒரு குடிமகனின் வாக்குரிமையைச் சிறு காரணத்திற்காகப் பறிக்க முடியாது" என அவர் வாதிட்டார்.

நிலைமை பதற்றமானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை ஆய்வு செய்த பின், ஒரு விரலில் மை வைக்க முடியாத சூழல் இருந்தால், அடுத்த விரலில் மை வைக்கலாம் என்ற அடிப்படையில் அக்சயாவின் நடுவிரலில் மை வைக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அக்சயா தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். சிறிய சட்டச் சிக்கலால் ஒரு பெண்ணின் வாக்குரிமை தற்காலிகமாகத் தடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.