இனி பத்திரப்பதிவிற்கு வில்லங்க சான்று கட்டாயம் - பதிவுத்துறை தலைவர் உத்தரவு!

 

தமிழகத்தில் வீடு மற்றும் மனை விற்பனைப் பத்திரங்களைச் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லாமலேயே இணையவழியில் பத்திரப்பதிவு செய்யும் புதிய வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதனையொட்டி, போலி ஆவணங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் பதிவுத்துறைத் தலைவர் அருண்சுந்தர் தயாளன் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

ஆன்லைன் மூலமாகப் பத்திரங்களைத் தாக்கல் செய்யும்போது, அப்போதே அதற்கான வில்லங்க சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்படும் பத்திரங்களில் திருத்தங்களோ அல்லது கூடுதல் விவரங்களோ தேவைப்படும் பட்சத்தில், சார்-பதிவாளர்கள் அதுகுறித்த விவரங்களை ஒரே நாளில் மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும்.

திருத்தங்களுக்காகத் திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்படும் பத்திரங்களுக்கு, ஏற்கனவே செலுத்திய கட்டண விவரங்களையே ஏற்றுக்கொள்ள வேண்டும்; மீண்டும் புதிதாகக் கட்டணம் கேட்கக் கூடாது. தேவையற்ற அல்லது அற்பக் காரணங்களைச் சுட்டிக்காட்டி பத்திரங்களைப் பதிவுக்கு ஏற்காமல் நிராகரிக்கக் கூடாது. ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், அதற்கான தகுந்த காரணத்தை எழுத்துப்பூர்வமாகத் தவறாமல் தெரிவிக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் கட்டண ரசீதுகளில் சார்-பதிவாளர்கள் 'டிஜிட்டல்' (Digital Signature) முறையில் சான்றொப்பம் இட வேண்டும். போலி ஆவணங்கள் பதிவாவதைத் தடுக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள அனைத்து நெறிமுறைகளையும் சார்-பதிவாளர்கள் கண்டிப்பாகவும் முறையாகவும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.