மதுரையில் பூசாரி பரமசிவம் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

 

மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோவில் பூசாரி பரமசிவம் உயிரிழந்த சம்பவத்தில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 18-ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவத்தைக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக அவரது மனைவி அய்யம்மாள் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையினரின் இந்தத் தாக்குதலாலேயே தனது கணவர் உயிரிழந்தார் என்றும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்றும் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த பரமசிவம், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பரமசிவம் இறப்பதற்கு முன் காவல்துறையினர் மீதான தாக்குதல் குறித்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நடத்தி வரும் போராட்டம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.