undefined

 வாக்காளர் பட்டியலில்   நாளை முதல் தமிழகத்தில் தீவிர திருத்தப் பணி தொடக்கம்! 

 
 

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் மற்றும் ஒரே நபரின் பெயர் பல தொகுதிகளில் இடம்பெற்றிருப்பது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை சரிசெய்யும் நோக்கில், தகுதியான வாக்காளர்களை மட்டும் உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்தப் பணிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (நவம்பர் 4) முதல் டிசம்பர் 4 வரை நடைபெற உள்ளன. இந்தக் காலத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்ப்பார்கள்.

இதன் பின் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ந்தேதி வெளியிடப்படும்; அதற்கான குறைகள் தீர்க்கப்பட்ட பின், இறுதி பட்டியல் பிப்ரவரி 7-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த திருத்தப் பணி ஒத்திவைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதோடு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இதுகுறித்து கூறியதாவது:

“2002 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில், நாளை முதல் கணக்கெடுப்பு தொடங்குகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அந்த ஆண்டுகளில் பெயர் இடம்பெற்ற வீடுகளுக்குச் சென்று தகவல்களை சேகரிப்பார்கள். வீடுகளில் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அவர்களுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரே வீட்டுக்கு 3 முறை வருவார்கள்.”

மேலும்,

2002 அல்லது 2005 பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு, பெற்றோர் அல்லது முன்னோர்களின் பெயர் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.முகவரி மாறியவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள், டிசம்பர் 7 முதல் ஜனவரி 3 வரை தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த நடவடிக்கை, வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.