கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை... பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றும்  சிகிச்சை பெறும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய 45 நாட்கள் விடுப்பு பெற முழுத் தகுதி உண்டு என்று கேரள உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கேரளாவில் ஒருங்கிணைந்த சிறைச்சாலை சிறப்புப் பயிற்சியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நிஷா ஜோஸ் மற்றும் மோளி ஆகிய இரு பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து தாங்கள் கோரிய மருத்துவ விடுப்பு விண்ணப்பத்தைக் கேரள அரசு நிராகரித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குப் பிரசவ விடுப்பு வழங்க விதிமுறைகளில் இடம் இருந்தாலும், கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்குச் சலுகை வழங்க இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி ஹரிசங்கர் வி. மேனன், பிரசவம் மற்றும் கருக்கலைப்புக்கு விடுப்பு வழங்கும் நிலையில், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு விடுப்பு தர மறுப்பது தெளிவான பாரபட்சமான செயலாகும் என்று சுட்டிக்காட்டினார்.

பெண்களின் உடல்நலம் தொடர்பான தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் 'ஒப்பந்த ஊழியர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக உரிய சலுகைகளை மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்து கொள்ளும் ஒப்பந்தப் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய 45 நாட்கள் விடுப்பு பெற உரிமை உண்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சமர்ப்பித்த விடுப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, அதன் மீது 4 மாதங்களுக்குள் உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.