வீடு, வாகனக் கடன்களுக்குப் புதிய கட்டுப்பாடு - ரிசர்வ் வங்கியின் 'ECL' அறிவிப்பு!

 

இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அதிகரித்து வரும் வாராக்கடன்களைக் கட்டுப்படுத்தவும், உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய அதிரடி விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, வரும் 2027 ஏப்ரல் 1 முதல் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கு 730-க்கும் அதிகமான 'சிபில் ஸ்கோர்' மிக முக்கிய அளவுகோலாக மாற்றப்படவுள்ளது.

தற்போது தமிழகத்தில் அரங்கேறி வரும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், நடுத்தர மக்களின் சொந்த வீடு மற்றும் வாகனக் கனவுகளில் இந்த புதிய நிதிசார் கட்டுப்பாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய நடைமுறைக்கு ECL (Expected Credit Loss - எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு) என்று பெயர். இதுவரை, ஒரு வாடிக்கையாளர் கடனை வாங்கிவிட்டு தொடர்ந்து 90 நாட்களுக்கு மேல் தவணைத் தொகையை கட்டாமல் இருந்தால் மட்டுமே வங்கிகள் அதனை வாராக்கடனாகக் கருதி, அதற்கான நிதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்.

இனிமேல் கடன் கொடுக்கும்போதே, வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர், வருமானம் மற்றும் கடந்த காலப் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இவரால் வராக்கடன் ஏற்படுமா என்பதை வங்கிகள் முன்கூட்டியே கணிக்க வேண்டும்.

கடன் வாங்குபவர் அதிக ரிஸ்க் உடையவராக இருந்தால், அந்த கடனுக்காக வங்கிகள் தங்களின் சொந்தப் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாக முன்கூட்டியே 'லாக்' செய்து வைக்க வேண்டும். இதனால் வங்கிகளுக்குக் கூடுதல் செலவு ஏற்படுவதால், கடன் வழங்குவதில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

வல்லுநர்களின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் சுமார் 62 சதவீத மக்களின் சிபில் ஸ்கோர் 730-க்கும் குறைவாகவே உள்ளது. இந்த புதிய விதியால் அவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படலாம். சிபில் ஸ்கோர் 650 முதல் 729 வரை உள்ள நடுத்தர ரிஸ்க் பிரிவினருக்குக் கடன் ஒப்புதல் கிடைப்பது கடினமாவதுடன், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கப்படலாம் அல்லது கூடுதல் பிணைப்பு கேட்கப்படலாம்.

சிபில் ஸ்கோர் 650-க்கும் கீழ் மிகக் குறைவாக உள்ளவர்களுக்குக் கடன் விண்ணப்பங்கள் நேரடியாக நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தவணைத் தொகையை அல்லது கிரெடிட் கார்டு பில்களைத் தாமதமாகச் செலுத்துவோருக்குக் கூடுதல் வட்டி மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும்.

முதன்முறையாகக் கடன் வாங்க நினைப்பவர்கள் மற்றும் இதுவரை சிபில் ஸ்கோர் கணக்கிடப்படாத நபர்களுக்கு இந்த விதியில் ஓரளவு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மாத வருமானத்தின் ஸ்திரத்தன்மை, வேலை பார்க்கும் நிறுவனத்தின் தரம் மற்றும் வேலைத் தன்மை ஆகியவற்றை மட்டுமே முதன்மையாகக் கணக்கில் கொண்டு வங்கிகள் தொடர்ந்து கடன்களை வழங்கும்.

2027-ல் இந்த இமாலய விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, நடப்பு 2026-ஆம் ஆண்டில் இருந்தே சிபில் ஸ்கோர் கண்காணிப்பை ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடன் விவரங்களைச் சிபில் அமைப்பிற்கு அனுப்பின. ஆனால், தற்போது ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை இந்த விவரங்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

எனவே, நாம் செய்யும் ஒரு சிறிய இஎம்ஐ தாமதம் கூட அடுத்த சில நாட்களிலேயே சிபில் ஸ்கோரை மளமளவெனக் குறைத்துவிடும் என்பதால், பொதுமக்கள் தங்களின் நிதி ஒழுக்கத்தைத் தற்போதிலிருந்தே சரியாகப் பராமரிப்பது அவசியமாகிறது.