வெளிநாடுகளிலிருந்து 60.1 டன் தங்கத்தை இந்தியாவுக்கு மாற்றிய ரிசர்வ் வங்கி... உள்நாட்டுக் கையிருப்பு 740.1 டன் தங்கமாக உயர்வு!
வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 60.1 டன் தங்கத்தைக் கடந்த 6 மாத காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தாயகத்திற்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்குள் வைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் மொத்தத் தங்கக் கையிருப்பு 740.1 டன்னாக அதிகரித்துள்ளது.
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் வெளிநாடுகளில் உள்ள கருவூலங்களிலிருந்து 60.1 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த இடமாற்றத்திற்குப் பிறகு உள்நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு 740.1 டன்னாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் தற்போது மொத்தம் 880.5 டன் தங்கக் கையிருப்பு உள்ளது. இதில் சுமார் 84 சதவீதம் தங்கம் இந்தியாவிற்குள்ளேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது.மொத்தமுள்ள 880.5 டன் தங்கத்தில் எஞ்சிய 140.4 டன் தங்கம், இங்கிலாந்து வங்கி மற்றும் சர்வதேச செட்டில்மென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் பாதுகாப்பில் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி மற்றும் தங்கக் கையிருப்பைப் பாதுகாப்பாக நிர்வகிக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை, நாட்டின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.