ஜி7 உச்சி மாநாட்டில் நெகிழ்ச்சி.. பிரதமர் மோடியைப் பார்த்ததும் எழுந்து நின்று ட்ரம்ப் செய்த காரியம்!
பிரான்ஸ் நாட்டின் இவியான் நகரில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 உச்சி மாநாடு தொடங்கியுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நெகிழ்ச்சியுடன் எழுந்து நின்று வரவேற்ற நிகழ்வு சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மாநாட்டு அரங்கில் உலகத் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட போது, ஜி7 உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நுழைந்ததைக் கண்டதும், அங்கு அமர்ந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனடியாகத் தனது இருக்கையை விட்டு எழுந்து சென்று, அவரைச் புன்னகையுடன் கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் நட்பு ரீதியாக உரையாடினர்.
இதற்கு முன்பு கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினர். அதன்பின்னர், சுமார் 16 மாதங்கள் கழித்து தற்போது தான் இருவரும் மீண்டும் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய - அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கியத்துவமிக்க இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் இரு தலைவர்களும் நாளை ஜூன் 18 ம் தேதி பங்கேற்றுப் பேசவுள்ளனர். பிரான்ஸ் வருகை குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரான்ஸ் நாட்டின் இவியான் நகருக்கு வந்துள்ளேன். இங்கு வந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்து, உலகளாவிய முக்கிய விவகாரங்கள் குறித்த இந்தியாவின் பார்வைகளைப் பரிமாறிக் கொள்ள ஆவலாகக் காத்திருக்கிறேன். நீடித்த மற்றும் வளம் நிறைந்த பூமிக்காக உலக நாடுகளின் கூட்டு முயற்சிகளை நவீனப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது."
பிரான்ஸ் நாட்டின் ஜி7 மாநாட்டிற்கு வருவதற்கு முன்பாகப் பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேகியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்குச் சென்ற பிரதமரை, அந்நாட்டு அதிபர் கை பார்மெலின் மற்றும் அவரது மனைவி கரோலின் மெரோட்டோ ஆகியோர் விமான நிலையத்திற்கே நேரில் வந்து முறைப்படி வரவேற்றனர்.
அதற்கு முன்பாகப் பிரதமர் மோடி சுலோவேகியா நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் சுலோவேகியா நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். பிரதமரின் இந்த சுலோவேகியா பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறை மற்றும் புலம்பெயர்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையிலான 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிக் காத்திரமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.