நெகிழ்ச்சி... இந்தோனேசியாவில் 100 நாட்களாக எரிந்த காட்டுத்தீயை அணைத்த பெருமழை... நடுரோட்டில் மண்டியிட்டு நன்றி சொன்ன தீயணைப்பு வீரர்கள்!

 

இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தான் பகுதியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த கடுமையான வறட்சி மற்றும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ, திடீரெனக் கொட்டித்தீர்த்த கனமழையால் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தான் பகுதியில் எல் நினோ தாக்கத்தின் காரணமாகக் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மழை பெய்யாமல் கடுமையான வறட்சி நிலவியது. இதனால் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை அணைக்க முடியாமல் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் தன்னார்வலர்களும் அஹோராத்திரியாகப் போராடி வந்தனர்.

காடுகளிலிருந்து வெளியேறிய அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் இந்தோனேசியாவைத் தாண்டி அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் வரை பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சுவாசத்தையும் கடுமையாகப் பாதித்தது.

மனித ஆற்றலால் அணைக்க முடியாமல் திணறி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பகுதியில் திடீரெனப் பெருமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை காட்டுத்தீயை முற்றிலும் அணைக்க உதவியது.

எதிர்பாராமல் பெய்த கனமழையைக் கண்ட தீயணைப்பு வீரர்கள் அளப்பரிய மகிழ்ச்சியடைந்தனர். தங்களின் பாதுகாப்பு சீருடைகளுடனே கொட்டும் மழையில் நனைந்தபடி, நடுரோட்டில் மண்டியிட்டு விழுந்து இறைவனுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

மழையில் நனைந்தபடி தீயணைப்பு வீரர்கள் கண்ணீருடன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரைக் கண் கலங்கச் செய்து வருகிறது.