மதுரையில் நெகிழ்ச்சி... PTR தாயார் காலில் விழுந்து ஆசி பெற்ற முதல்வர் விஜய்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வருகை தந்த முதலமைச்சர் விஜய், கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜனைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மதுரை சென்ற முதலமைச்சர் விஜய், அங்குத் திருப்பணிகள் நிறைவடைந்து அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வருகை தந்த முதலமைச்சருக்குக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், பி.டி.ஆர். தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். அப்போது அவரது கரங்களைப் பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய், எதிர்பாராதவிதமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
கோயிலின் குடமுழுக்கு அழைப்பிதழில் பெயர் விடுபட்டது குறித்தும், கோயில் ஏற்பாடுகள் மற்றும் அனுமதி அட்டைகள் விநியோகத்தில் குளறுபடிகள் உள்ளதாகவும் ருக்மணி பழனிவேல் ராஜன் இதற்கு முன்பு பகிரங்கமாகத் தன் அதிருப்தியைத் தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் அவரிடம் காட்டிய இந்த மரியாதை அரசியல் தாண்டிய பண்பாட்டைக் காட்டுவதாக நெகிழ்ச்சியுடன் பேசப்பட்டு வருகிறது.