மராட்டிய அரசியலில் நெகிழ்ச்சி... சுனேத்ரா பவார் போட்டியின்றி தேர்வு; பாராமதியில் காங்கிரஸ் பின்வாங்கல் - மறைந்த அஜித் பவாருக்கு மரியாதை!!
மராட்டிய முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவால் காலியான பாராமதி சட்டமன்றத் தொகுதிக்கு, அவரது மனைவி சுனேத்ரா பவார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
மராட்டிய அரசியலின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அஜித் பவார், கடந்த ஜனவரி 28, 2026 அன்று பாராமதி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தார். இதனால் காலியான பாராமதி தொகுதிக்கு ஏப்ரல் 23-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அஜித் பவார் மீதான மரியாதையின் காரணமாக, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (SP) மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்திருந்தன. இருப்பினும், காங்கிரஸ் சார்பில் ஆகாஷ் மோரே வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். இது மகாயுதி கூட்டணியினர் மற்றும் பவார் குடும்பத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மகாயுதி தலைவர்களின் கோரிக்கை மற்றும் சரத் பவாரின் ஆலோசனைக்குப் பிறகு, இன்று மதியம் காங்கிரஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது மராட்டிய மாநிலத்தின் முதலாவது பெண் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் சுனேத்ரா பவார், இந்த வெற்றியின் மூலம் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகிறார்.
காங்கிரஸ் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் களத்தில் இருந்தனர். அவர்களும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலகிக் கொண்டதால், சுனேத்ரா பவார் போட்டியின்றித் தேர்வானதாகத் தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.