நெகிழ்ச்சி.. மகள்களின் கல்விக்காக வெறும் காலில் மராத்தான் ஓடி முதலிடம் பிடித்த தாய்!

 

மகாராஷ்டிராவில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள 47 வயது தாய் ஒருவர், தனது மகள்களின் உயர்கல்விச் செலவிற்காக எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல் பாரம்பரிய உடையுடன் வெறும் காலில் மராத்தான் ஓடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (47). கணவனை இழந்த இவர், ஒரு தனியார் கல்வி அகாடமியில் சமையல் வேலை செய்து தனது இரண்டு மகள்களையும் படித்து வருகிறார். மூத்த மகள் பி.எஸ்சி படித்துக்கொண்டே காவல் துறைத் தேர்வுக்கும், இளைய மகள் வங்கித் தேர்வுக்கும் தயாராகி வருகின்றனர். வறுமை காரணமாக மகள்களின் கல்விச் செலவையும் புத்தக வாங்கும் செலவையும் சமாளிக்க அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

அம்பாஜோகாய் பகுதியில் உள்ள அகாடமி சார்பில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கான 'அமிர்த ஓட்டம்' மராத்தான் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மகள்களின் படிப்புச் செலவுக்குப் பணம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துடன் ரமாபாய் அற்பணிப்புடன் களமிறங்கினார்.

பாரம்பரியப் புடவை அணிந்து ஓடத் தொடங்கியபோது செருப்பு தடையாக இருந்ததால், சற்றும் யோசிக்காமல் அதைக் கழற்றி கையில் பிடித்துக்கொண்டு கரடுமுரடான தார்ச்சாலையில் வெறும் கால்களோடு அவர் ஓடினார். தன்னைவிடப் பாதியளவு வயதுடைய இளம்பெண்களுக்குப் போட்டியாக அதிவேகமாக ஓடி அவர் முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் அவரது மூத்த மகளும் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

போட்டியில் முதலிடம் பிடித்த ரமாபாய்க்கு முதல் பரிசாக ரூ. 3,000 ரொக்கப்பணமும் கோப்பையும் வழங்கப்பட்டது. "இந்தப் பரிசுத் தொகையை என் மகள்களின் படிப்புச் செலவிற்கும் புத்தகங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்துவேன்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வறுமையிலும் தன் மகள்களுக்காக வெறும் காலில் ஓடி வென்ற இந்தத் தாயின் தியாகம் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.