நெகிழ்ச்சி... அறுசுவை உணவுடன் குரங்குகளுக்கு 'வானர சத்யா' - கேரளக் கோயிலில் ஓணம் விருந்து!

 

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, குரங்குகளுக்காக நடத்தப்படும் புகழ்பெற்ற 'வானர சத்யா' (குரங்குகளுக்கான ஓணம் விருந்து) நிகழ்வு இவ்வாண்டும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கொல்லம் மாவட்டம் சாஸ்தாம்கோட்டாவில் உள்ள புகழ்பெற்ற தர்ம சாஸ்தா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின் 'உத்திராடம்' மற்றும் 'திருவோணம்' ஆகிய இரண்டு முக்கிய நாட்களில் குரங்குகளுக்கு இந்த சிறப்பு விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

கோயிலில் உள்ள 'வானர போஜன சாலா' பகுதியில் வாழை இலைகள் பரப்பப்பட்டு சோறு, பருப்புக் குழம்பு, அப்பளம், பச்சடி, அவியல் மற்றும் ஊறுகாய் உள்ளிட்ட பாரம்பரிய ஓணம் உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

உத்திராடம் நாளான நேற்று உணவு தயார் செய்யப்பட்டதும், முதலில் ஒரு குரங்கு வந்து உண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து குரங்கு கூட்டங்கள் வரிசையாக வந்து, எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை உண்டு சென்றன.

குரங்குகள் மனிதர்களைப் போல முறைப்படி வரிசையில் அமர்ந்து ஓணம் விருந்தை உண்டு சென்ற இந்த அரிய நிகழ்வைக் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் கண்டு ரசித்தனர்.