நெகிழ்ச்சி... மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த ஆசிரியை... தாயாக மாறிய மாமியார்!
தனது மகன் உயிரிழந்த பிறகு இளம் வயதில் விதவையான மருமகளின் வாழ்க்கை தனிமையில் முடிந்துவிடக் கூடாது என எண்ணி, சொந்த மகளாகக் கருதி அவருக்கு மறுமணம் செய்து வைத்த கேரளப் பள்ளி ஆசிரியையின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இவரது பரந்த மனப்பான்மைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அரீக்கரா பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் தாரா டீச்சர். இவரது கணவர் பிரகாஷ், மகன் கண்ணன் மற்றும் மருமகள் கிருஷ்ணா ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாரா டீச்சரின் மகன் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரின் எதிர்பாராத மரணத்தால் இளம் வயதிலேயே விதவையான கிருஷ்ணா, கணவரின் நினைவுகளுடன் மாமியார் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.
ஒருபுறம் மகனை இழந்த துயரம், மறுபுறம் மருமகளின் எதிர்காலம் குறித்த கவலை எனத் தாராவும் அவரது கணவர் பிரகாஷும் வேதனையில் இருந்தனர். இந்நிலையில், மற்றொரு பேரிடியாகத் தாராவைத் தனியாக விட்டுவிட்டு அவரது கணவர் பிரகாஷும் காலமானார். மகனையும் கணவரையும் அடுத்தடுத்து இழந்த தீராத வேதனையில் தவித்தபோதிலும், தாரா டீச்சரின் மனம் தனது மருமகள் கிருஷ்ணாவின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்தது.
"நான் இழந்த எனது மகனையும் கணவரையும் இனி மீண்டும் பெற முடியாது. ஆனால், எனது மருமகள் கிருஷ்ணாவுக்கு இன்னும் ஒரு நீண்ட வாழ்க்கை இருக்கிறது. கணவரின் நினைவுகளுடனேயே அவரது வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது; அவருக்கும் அன்பும் அக்கறையும் நிறைந்த ஒரு புதிய வாழ்க்கை அமைய வேண்டும்" எனத் தாரா டீச்சர் உறுதியாக முடிவெடுத்தார்.
அதன்படி, தனது சொந்த முயற்சியிலேயே தகுந்த வரனைத் தேடிப் பிடித்து, மருமகள் கிருஷ்ணாவுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். ஒரு மாமியாராக மட்டுமல்லாமல், உண்மையான தாயின் அன்பும் அக்கறையும் எப்படி இருக்கும் என்பதைத் தனது செயலால் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஆலப்புழா பகுதியில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான மறுமணச் சம்பவம் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தாரா டீச்சருக்குச் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பெண்ணின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு முற்போக்குச் சிந்தனையுடனும், தாய்மை உணர்வுடனும் சிந்தித்து, மருமகளுக்குப் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த தாரா டீச்சர் சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார் எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.