காதலுக்கு எதிர்ப்பு... ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!

 

உத்தரப் பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் காதலுக்காகத் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட இளஞ்ஜோடிகளின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது.

காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பித் தங்களது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுள்ளனர். ஆனால், இரு வீட்டின் பெற்றோருமே இவர்களது திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்ட மறுத்து, கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பலமுறை முயற்சித்தும் பெற்றோரைச் சம்மதிக்க வைக்க முடியாததால், வாழ்க்கையை முடித்துக்கொள்ளக் காதலர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர்.

நேற்று மாலை, மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாகிராத் ரயில் நிலையத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் இருவரும் கைகோர்த்தபடி பாய்ந்துள்ளனர். இதில் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரித்த போலீசார், அவர்களது பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தைத் தாண்டி வேறு ஏதேனும் கட்டாயங்கள் இருந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​​​​​​​குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால், உதவிக்கு 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு மைய எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.