ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு...  சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் அறிவிப்பு!

 

தமிழ்நாட்டில் சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் சொத்துப் பத்திரப் பதிவுகள் பெருமளவில் நடைபெறுவது வழக்கமாகும். பொதுமக்கள் சுபநாட்களில் புதிய ஆவணங்களைப் பதிவு செய்ய அதிகளவில் சார்பதிவாளர் அலுவலகங்களை நாடுவது உண்டு. வரவிருக்கும் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்களது சொத்து ஆவணங்களைப் பதிவு செய்யப் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்களின் தேவையை உணர்ந்து பத்திரப் பதிவுச் பணிகளை எவ்விதத் தாமதமும் இன்றி தடையின்றி முடிக்கும் வகையில் அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று வரும் 3ம் தேதி அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கையை விட கூடுதல் டோக்கன்களை வழங்கிப் பத்திரப்பதிவுச் பணிகளை விரைவுபடுத்தப் பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுபநாளில் பத்திரப் பதிவு செய்ய விரும்பும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்ட நெரிசலைத் தவிர்த்துச் தடையற்ற சேவையை வழங்க அனைத்து அலுவலகங்களுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த புதிய அறிவிப்பின்படி ஒரு சார் பதிவாளர் மட்டுமே உள்ள அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும். அதேபோல இரண்டு சார் பதிவாளர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் வழக்கமான 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 டோக்கன்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. பொதுமக்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து இந்த கூடுதல் டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.