உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வா? - டேவிட் மில்லர் பரபரப்பு பேட்டி!

 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கைப்பற்றி, சாம்பியன் என்ற பெருமையோடு சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதே தனது முதன்மையான லட்சியம் என அவர் கூறியுள்ளார்.

37 வயதாகும் மில்லர், அணியில் தனது இடம் உறுதி என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும், தென்னாப்பிரிக்க அணியில் இடம் பிடித்துத் தனது சிறந்த பங்களிப்பை அளிக்க இப்போதிருந்தே தீவிரமாக உழைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரானது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் இணைந்து நடத்தப்படவுள்ளது குறிப்பிடத் தக்கது.

டேவிட் மில்லரின் 178 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,611 ரன்கள் எடுத்துள்ளார். 7 சதங்கள், 24 அரைசதங்கள் அடங்கும்.  ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில்லை என்ற வரலாற்றுச் சுமையை உடைத்து, கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மில்லரின் இந்த விருப்பம் ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.