கொல்கத்தாவில் நாளை முதல் 144 தடை.. 60 நாட்களுக்குப் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை - காவல்துறை அதிரடி!

 

மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் வரும் திங்கட்கிழமை (மே 4) வெளியாக உள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, கொல்கத்தா மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொல்கத்தா காவல் ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, நாளை மே 3-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை (60 நாட்களுக்கு) நகரின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு (தற்போது BNSS பிரிவு 163) அமலில் இருக்கும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூட்டமாகக்கூட அனுமதி இல்லை.

ஊர்வலங்கள், போராட்டங்கள், பேரணிகள் மற்றும் தர்ணாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கத்தி, லத்தி போன்ற ஆபத்தான ஆயுதங்களை ஏந்திச் செல்லவும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகில் வன்முறைப் போராட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக்கூடும் என்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பௌபஜார், ஹரே ஸ்டரீட் மற்றும் தலைமையகப் போக்குவரத்துப் பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மே 4-ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரும், மாநிலப் போலீசாரும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றிக் கொண்டாட்டங்களின் போது மோதல்கள் ஏற்படாமல் இருக்க இந்த 60 நாள் தடை உத்தரவு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.