undefined

5 சவரன் நகைகளுக்காக ஓய்வுபெற்ற ஆசிரியை படுகொலை!

 

சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் திருமலைநாயக்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாயாரம்மாள் (84). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 11-ம் தேதி தாயாரம்மாள் வீட்டில் சடலமாகக் கிடந்துள்ளார். உறவினர்கள் முதலில் அவர் வயது மூப்பின் காரணமாக இயற்கை மரணம் அடைந்துவிட்டார் என்றே கருதினர். இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் அவரது செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். மூதாட்டியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கடைசியாக ஜமுனா என்ற பெண்ணுடன் அவர் பேசியது தெரியவந்தது. கோவையில் பதுங்கியிருந்த ஜமுனாவை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

10 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியின் வீட்டின் அருகே வசித்த ஜமுனா, அவருடன் நட்பாக இருந்துள்ளார். அவ்வப்போது மூதாட்டியிடம் சிறு தொகையைக் கடனாகப் பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மூதாட்டியின் வீட்டிற்கு வந்த ஜமுனா, தனக்குக் கடன் தொல்லை இருப்பதால் பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் தர மறுக்கவே, நள்ளிரவு 2 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தாயாரம்மாளின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி ஜமுனா கொலை செய்துள்ளார். பின்னர் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடிக் கொண்டு  அங்கிருந்து தப்பியோடியுள்ளார். திருடப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்த போலீசார், ஜமுனாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகைகளுக்காகத் தனது தோழியையே கொலை செய்த ஜமுனாவின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.