undefined

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது!

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் டிசம்பர் 4ம் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளன.

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள், ஒரே நபரின் பெயர் பல தொகுதிகளில் இடம்பெற்றிருப்பது போன்ற குறைகள் நீக்கப்படும். இதன் மூலம் தகுதியான வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெறுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் இணைந்து வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பை மேற்கொள்கின்றனர். இப்பணிக்கான வழிகாட்டுதல்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வழங்கியுள்ளார்.

அவரின் விளக்கத்தின் படி, 2002 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று சரிபார்ப்பார்கள். அந்த வீடுகளில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படுகின்றன.

ஒரு வீட்டிற்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூன்று முறை வருவார்கள். வாக்காளர்கள் அவசியமான ஆவணங்களுடன் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், 2002 மற்றும் 2005 பட்டியல்களில் பெயர் இல்லாதவர்களும் தங்களது குடும்ப உறவுகளின் பெயர் மற்றும் ஆதார ஆவணங்களை காட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சில அரசியல் கட்சிகள் இந்த காலக்கட்டத்தில் திருத்தப் பணி நடத்துவதை எதிர்த்து, இதை ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளன. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் முயற்சியும் நடைபெறுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?