“ரைட் பார்ட்டி... ராங் லீடர்... ” அதிமுகவில் இருந்து கண்ணீரோடு வெளியேறினோம்!’ - தவெக-வில் இணைந்த பின் வைகைச்செல்வன் உருக்கம்!
"அதிமுக என்பது சரியான இயக்கம்; ஆனால் அங்கு தவறான ஒரு தலைவர் (எடப்பாடி பழனிசாமி) தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இதனாலேயே பல்வேறு மனக்கசப்புகள் மற்றும் கண்ணீருக்கு ஆளாகி, வேறு வழியின்றி அந்த இயக்கத்திலிருந்து வெளியேறினோம்" என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளருமான வைகைச்செல்வன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று மதியம் முதல் 'மாற்றுக் கட்சியினர் இணையும் மெகா விழா' மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், வி. புகழேந்தி ஆகியோரைத் தொடர்ந்து, அதிமுகவின் மிக முக்கியக் கொள்கை பரப்பு முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த வைகைச்செல்வன் இன்று தவெக-வில் முறைப்படி இணைந்தார்.
கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச்செல்வன், அதிமுக மேலிடத்தின் மீதான தனது அடுக்கடுக்கான குமுறல்களை வெளிப்படுத்தினார்.
"அதிமுக தொண்டர்கள் மீது எங்களுக்கு எவ்விதக் கோபமும் இல்லை. அது ஒரு 'ரைட் பார்ட்டி' (சரியான இயக்கம்). ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு ஒரு 'ராங் லீடர்' (தவறான தலைவர்) அமர்ந்திருக்கிறார். அவரது ஒருதலைப்பட்சமான உத்திகளால் கட்சியில் எங்களைப் போன்ற சீனியர்கள் பல சோதனைகளையும், கண்ணீரையும் மட்டுமே பரிசாகப் பெற்றோம்."
"அதிமுகவின் அந்த மனக்கசப்பான சூழலில் இருந்து விலகி, இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளோம். முதலமைச்சர் விஜய் அவர்கள் மிகவும் எளிமையான, அருமையான ஒரு மக்கள் தலைவராக விளங்குகிறார்."
தவெக அரசின் எதிர்காலச் செல்வாக்கு மற்றும் தேர்தல் களம் குறித்துப் பேசிய வைகைச்செல்வன், "முதலமைச்சர் விஜய் அவர்களின் உண்மையான மக்கள் செல்வாக்கும், தவெக-வின் அசுர பலமும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முழுமையாகத் தெரியவரும். தமிழ்நாட்டின் அரசியல் திசையைத் தவெக மாற்றியமைக்கும்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.