ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி.... கை கொடுக்குமா காங்கிரஸ்? முந்துமா திமுக?
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் 1962 முதல் 2021 வரை மொத்தம் 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை உற்று நோக்கினால், அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக, தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு முறையும் இங்கு வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2011-இல் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது திமுகவைச் சேர்ந்த வசந்தம் கார்த்திகேயன் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இந்தத் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றி வைத்துள்ளார். குறிப்பாக 2021 தேர்தலில், அதிமுக வேட்பாளர் சந்தோஷை விட 41,728 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அபார வெற்றி பெற்றார். தொகுதி மக்களிடையே இவருக்கு இருக்கும் செல்வாக்கு வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும் என திமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், வரும் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியை மீண்டும் கைப்பற்ற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு இங்கு பாரம்பரிய வாக்கு வங்கி இருப்பதால், திமுக கூட்டணியில் யாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது மற்ற கட்சிகள் தங்களது செல்வாக்கை நிரூபிக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.