எகிறும் எதிர்பார்ப்பு... டெல்லி சென்ற அண்ணாமலை காரில் பாஜக கொடி நீக்கம்! 

 
அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தனது காரில் கட்சியின் கொடி இல்லாமல் சென்னை விமான நிலையம் வந்ததும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசுவதற்காக அண்ணாமலை இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் காரில் பாஜக கொடி கட்டப்படாமல் இருந்தது அங்கிருந்தவர்களிடையே விவாதத்தைக் கிளப்பியது.

அவர் ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் தனியாகப் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

‘புதிய கட்சி தொடங்கவுள்ளீர்களா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இன்னும் 2 நாள்-ல சொல்றேன்” என்று மட்டும் சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்திக்க டெல்லி சென்றுள்ள நிலையில், காரில் கொடி இல்லாததும் அண்ணாமலையின் இந்த அதிரடிப் பதிலும் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.