எகிறும் எதிர்பார்ப்பு... இன்று டெல்லியில் கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு! 

 

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காவிரியிலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய உரியத் தண்ணீரின் அளவு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய அணைகளின் (கே.ஆர்.எஸ், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி) மொத்த நீர் இருப்பு உயர்ந்துள்ள போதிலும், தமிழ்நாட்டிற்கு உரிய விகிதாச்சாரப்படி நீர் திறந்துவிடப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்திற்கான ஒப்பந்தப் படி கர்நாடகா 45.5 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மொத்தமாக 88 டி.எம்.சி நீர் வழங்கப்பட வேண்டிய இடத்தில், தற்போது வரை சுமார் 10 டி.எம்.சி நீர் மட்டுமே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்து சேர்ந்துள்ளது.

உரிய நீர் கிடைக்காத காரணத்தால், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இச்சூழ்நிலையில் டெல்லியில் நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழுவின் இன்றைய கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.